மருத்துவ உலகில் ஒரு ஆச்சரியமூட்டும் சம்பவம் கடந்த 17 வருடங்களுக்கு முன்பு நடைபெற்றது. உலகில் உள்ள அனைத்து மருத்துவர்களும் தங்களது மூக்கின் மேல் விரல் வைத்து யோசிக்கும் அளவிற்கு நடைபெற்ற அந்த விநோத சம்பவம் என்னவென்றால், தாயின் கருப்பையில் இருந்த 21 வார குழந்தை ஒன்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவரை கையால் பிடித்து இழுத்தது தான். உலகம் முழுவதும் அப்பொழுது டாக்டர்கள் மட்டுமல்லாமல் சாதாரண மக்களால் கூட இந்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டது.
அமெரிக்காவில் கடந்த 17 வருடங்களுக்கு முன் ஜூலி ஆரமாஸ் என்ற பெண் கருவுற்றிருந்தாள். குழந்தை கருவில் இருக்கும்போதே அக்குழந்தைக்கு முதுகெலும்பு குறைபாடு இருப்பது மருத்துவர்களால் கண்டறியப்பட்டது. இதனை சரிசெய்ய பிரசவத்திற்கு முன்னர் அதாவது கருப்பையில் குழந்தை 21-வது வாரத்தில் இருக்கும் போது ஜூலி ஆரமாஸ்-க்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். ஆனால் அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்களுக்கு ஒரே ஷாக். காரணம் என்னவென்றால் ஜூலி ஆரமாஸின் கருப்பையில் இருந்த 21 வார குழந்தை மருத்துவரின் கையை பிடித்து இழுத்தது. மனித வரலாற்றில் முதன் முறையாக கடந்த 17 வருடத்திற்கு முன்னர் இந்த சம்பவம் நடைபெற்றது. அதன்பின்னர் இதுபோன்ற எந்தஒரு சம்பவமும் யாருக்கும் நடைபெறவில்லை.
அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிக்கப்பட்ட நிலையில் 4 மாதம் கழித்து 1999-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 2-ம் தேதி ஜூலி ஆரமாஸ்-க்கு ஆண் குழந்தை பிறந்தது. சாமுவேல் ஆரமாஸ் என்று பெற்றோர்கள் அக்குழந்தைக்கு பெயரிட்டனர். தற்போது 16 வயது இளைஞனாக சாமுவேல் உள்ளார். அவரது காலில் சிறிய குறைபாடு காணப்படுவதால் தொலைதூர பயணத்திற்கு சாமுவேல் வீல் சேரை தான் பயன்படுத்தி வருகிறார். தனது காலில் சிறிய ஊனம் இருந்தாலும் மனதில் எந்தவித ஊனமும் கிடையாது என சொல்லிக் கொள்ளும் சாமுவேல் அதனை செயல்படுத்தியும் வருகிறார். கூடைப்பந்து விளையாட்டை கூலாக விளையாடும் சாமுவேல் தனக்கு ஓட்டமும், நீச்சலும் மிகவும் பிடிக்கும் என மெய் சிலிர்க்கிறார்..
சாமுவேல், கர்ப்பபையில் இருக்கும் மருத்துவரின் கையை பிடித்து இழுத்த படங்களும், தற்போது வளர்ந்து ஆளாகியுள்ள அவரின் படங்களும் உங்களது பார்வைக்காக மேலே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.